பேராதனை போதனா வைத்தியசாலையில் டெண்டர் விவகாரத்தில் இலஞ்சம்: இருவர் சுற்றிவளைப்பு
கம்பளையில் ரூபாய் 20 லட்சம் (2 மில்லியன்) லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராதனை போதனா வைத்தியசாலைக்கு 2027ஆம் ஆண்டிற்காக உணவுகளை விநியோகிக்கும் டெண்டர் (Tender) ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (27-07-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கைது நடவடிக்கை
மேலும் தெரியவருகையில், கம்பளை தபால் நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் வைத்து இச்சந்தேகநபர்கள் இருவரும் அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கம்பளையைச் சேர்ந்த அருணகிரி நாடார் லோகேந்திரன் என்ற வர்த்தகர் மற்றும் லோகேந்திரன் சிவராஜி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேவையில்லாத போட்டி
குறித்த டெண்டர் போட்டியில் தங்களது தந்தை மற்றும் மாமாவின் பெயர்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து தேவையில்லாத போட்டியை உருவாக்காமல் இருப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் சந்தேகநபர்கள் ஆரம்பத்தில் ரூபாய் 30 லட்சம் லஞ்சமாகக் கோரியுள்ளனர்.

இதையடுத்து, இத்தொகை ரூபாய் 25 லட்சமாகக் குறைக்கப்பட்டு இறுதியில் ரூபாய் 20 லட்சத்திற்குப் பேரம் பேசப்பட்டு லஞ்சப் பணத்தைப் பெற்றபோதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரையும் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 20 மணி நேரம் முன்