அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு - சிதறி ஓடிய மக்கள்: இருவர் பலி - பலர் காயம்
அமெரிக்காவில் நடைபெற்ற உணவுத்திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 வயதுக் குழந்தை உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை ( 26) மாலை 6:00 மணியளவில், சீயட்டில் சென்டர் வளாகத்தில் நடைபெற்ற 'பைட் ஒப் சியட்டில்' என்ற பிரசித்தி பெற்ற உணவுத் திருவிழாவின் போது நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாகச் சியட்டில் தீயணைப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
தீவிர சிகிச்சை
நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்த வேளையில், திடீரென 7 முதல் 8 முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அதிர்ச்சியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

2 வயதுக் குழந்தை, 23 வயது இளைஞர், 03 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒரு பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர விசாரணை
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் குறித்தோ அல்லது இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணம் குறித்தோ உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

சியட்டல் காவல்துறை திணைக்களம், எப்.பி.ஐ மற்றும் ஏ.டி.எப்போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சியட்டல் சென்டர் மோனோரெயில் தொடருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |