கூகுள் வரைபடத்தை நம்பி அலரி மாளிகைக்குள் புகுந்த இளைஞர்கள்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கூகுள் வரைபடம் காட்டிய பாதையின்படி சென்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
குறித்த இரு நபர்களும் கடந்த சனிக்கிழமை (02) கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்குள் நுழைந்ததனால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தி
மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் கடந்த சனிக்கிழமை (03) இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு மது அருந்தி விட்டு முகாந்திரம் வீதியில் உள்ள தங்குமிடத்திற்கு செல்ல கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், கூகுள் வரைபடம் காட்டிய பாதையில் சென்ற போது அவர்கள் அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்
இதன்போது, பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |