கொழும்பில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: காலி முகத்திடல் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தி
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக ஆரம்பிக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டு இன்று நினைவு கூரப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி அப்போதைய சிறிலங்காவின் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதவி விலகிய மகிந்த
இந்த போராட்டத்தின் மீது அப்போதைய சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல்களை மேற்கொண்ட பின்னணியில், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அவர் பதவி விலகியிருந்தார்.
இதனை தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதோடு அப்போதைய சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் பதவி விலகியிருந்தார்.
இந்த நிலையில், காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியகியுள்ளன.
காவல்துறையினர் குவிப்பு
இதனை முன்னிட்டு “ஒன்பதில் தொடங்கிய மக்கள் அதிகாரம் வெற்றி வரை முன்னோக்கி” எனும் தொனிப்பொருளில் இன்று கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பேரவைக்கான இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக செயற்பாட்டளார்கள், மதத்தலைவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சிறிலங்கா காவல்துறையினர் வரிசைப்படுத்தப்பட்டிருந்ததோடு, நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |