வெளியாகவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்..! பரீட்சைகள் ஆணையாளர் தகவல்
கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராத உயர் தரப்பரீட்சை முடிவுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியாகாத நிலையில், பரீட்சைகள் நிறைவடைந்து ஐந்து மாதங்கள் அளவில் கடந்து விட்டது.
இந்நிலையில், இம் மாதம் 30 ம் திகதி உட்பட்ட காலப்பகுதிக்குள் குறித்த பரீட்சை முடிவுகளை வெளியிட முடியும் என கல்வி அமைச்சர் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் பாடசாலைகள் ஊடாக 2 லட்சத்து 79 ஆயிரத்து 150 மாணவர்கள் தோற்றியதுடன் தனிப்பட்ட ரீதியில் 66 ஆயிரத்து 150 பேர் தோற்றியுள்ளனர். 240 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெற்றன.
கொரோனா தொற்றிய பரீட்சாத்திகளுக்காக 28 நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்பட்டன.935 தனிமைப்படுத்த பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைகள் நடத்தப்பட்டன.
எவ்வாறாயினும், குறித்த பரீட்சை முடிவுகள் இன்னும் வெளிவராதா நிலையில் மாத இறுதிக்குள் வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை
இதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.
எதிர்வரும் 26ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.