பூமியின் அதிக வெப்பமான ஆண்டு : வெளியான அதிர்ச்சித் தகவல்
புவி மேற்பரப்பில் சராசரி வெப்பநிலை 2023 ஆம் ஆண்டில் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பை நெருங்கி உள்ளது.
இதனால் 2023 ஆம் ஆண்டு பூமியின் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது.
இதுவரை பதிவு செய்யப்படட பூமியின் வெப்பநிலை வரலாற்றின் படி, மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய காலநிலை கண்காணிப்பு சேவை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிக வெப்பநிலை
பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததை விட அதிகரித்துள்ளது என ஐரோப்பிய ஒன்றிய காலநிலை கண்காணிப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட, இந்த ஆண்டில் முதல் முறையாக அனைத்து நாட்களிலும் ஒரு டிகிரி அளவுக்கு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது என கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை துணைத் தலைவர் சமந்தா பர்கெஸ் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் பாதிப்பு
2024 ஜனவரி மாதம் முதல் முறையாக இந்த 1.5 டிகிரி வரம்பைத் தாண்டி வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்காவது பூமியின் மேற்பரப்பு வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என விஞ்ஞானிகள் பலமுறை கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2023 இன் வெப்பநிலை குறைந்தது கடந்த 1 இலட்சத்துக்கும் அதிகமான ஆண்டுகளில் எந்த காலகட்டத்திலும் இல்லாததை விட அதிகமாக இருப்பதாக சமந்தா பர்கெஸ் கூறியுள்ளார்.
எதிர்கால சந்ததியினர்
இந்த வரம்புக்கு மேல் புவி வெப்பம் அதிகரிப்பது இப்போது வாழும் மக்களை பாதிக்காது என்றாலும் அவர்களது குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையில், வெப்பமயமாதலின் மிகக் கடுமையான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக புவி வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்புக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |