எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நிவாரணம் வழங்குவது சாத்தியமற்றது
பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்சியடைய வேண்டுமாயின் கசப்பான மருந்தை அனைவரும் பருக வேண்டும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(16) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் உரையாற்றுகையில்,
நிவாரணம்
“நாட்டின் தற்போதைய நிலைமையை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடுமையான பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். நிதி இல்லாமல் எவ்வாறு நிவாரணம் வழங்குவது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் சகலருக்கும் நிவாரணம் வழங்குவது சாத்தியமற்றது.
சர்வதேச நாணய நிதியம்
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அதிபரால், முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் சிறந்தவையாக காணப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் தான் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சகல தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
பொருளாதார மீட்சிக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.” என்றார்.