ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடந்த போட்டிப் பரீட்சை
நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை உள்வாங்கும் போட்டிப் பரீட்சை 2023 (2026) நேற்றைய தினம் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட 1048 மத்திய நிலையங்களில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இந்த பரீட்சைக்கென அரச சேவையில் ஈடுபட்டுள்ள 66 991 விண்ணப்பதாரர்களும் 96442 ஏனைய துறைசார் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர். விசேட தேவையுடைய விண்ணப்பதாரர்கள் 323 பேர் பரீட்சை எழுதினர்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
முன்னதாக 2023 ஆம் ஆண்டில், அரச சேவையிலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சையொன்றை நடத்துவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டிருந்தது.

எனினும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த ஒரு வழக்கு ஆகியன காரணமாகக் குறித்த பரீட்சை நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அனைத்து வழக்கு நடவடிக்கைகளும் நிறைவடைந்திருப்பதையடுத்து, நாடு முழுவதும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குத் தீர்வை வழங்கும் நோக்கில், அரச சேவையிலுள்ள பட்டதாரிகளும் ஏனைய பட்டதாரிகளும் தோற்றக்கூடிய வகையில் இம்முறை பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |