சுமார் 21 விமான நிலையங்களை முடக்கியது இந்தியா - நடப்பது என்ன..!
இந்திய வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள சுமார் 21 விமான நிலையங்கள் பயணிகள் விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்தியா புதன்கிழமை அதிகாலை தாக்கியதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள 21 விமான நிலையங்களில் சனிக்கிழமை (மே 10) அதிகாலை 5.29 மணி வரை பயணிகள் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
முடக்கப்படும் விமான நிலையங்கள்
இந்த நிலையில், லே, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், பதான்கோட், சண்டிகர், ஜோத்பூர், ஜெய்சால்மர், ஜாம்நகர், பட்டிண்டா, பூஜ், தர்மசாலா, சிம்லா, ராஜ்கோட், போர்பந்தர், பிகானர், ஹிண்டன், கிஷன்கர், காண்ட்லா மற்றும் குவாலியர் ஆகிய விமான நிலையங்கள் பயணிகள் விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் சனிக்கிழமை (10) காலை வரை குறித்த விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் வரும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.
பாகிஸ்தான் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீதான இந்தியத் தாக்குதலுக்குப் பிறகு, அனைத்து வெளிநாட்டு விமான நிறுவனங்களும் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதை நிறுத்தியுள்ளன.
பாகிஸ்தானின் அறிவிப்பு
இதேவேளை, இந்தியாவின் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் சொந்த பயணிகள் விமானங்கள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் நாட்டின் வான்வெளியை 48 மணிநேரத்திற்கு முழுமையாக மூடுவதாக அறிவித்திருந்தது.
அத்துடன், இந்தியத் தாக்குதலின் போது 57 விமானங்கள் வானில் பறந்துக் கொண்டிருந்தாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அதன்போது, பாகிஸ்தான் விமானங்கள் உட்பட சவுதி, கத்தார், எமிரேட்ஸ், எதிஹாத், கல்ஃப் ஏர், சீன மற்றும் கொரிய விமானங்களும் இருந்தாகவும் ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிர்கள் பெரும் ஆபத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
