சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 21 பேர் காயம்
சீனாவில் இன்று(06) அதிகாலையில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சீனாவின் தெற்கு பகுதியில் ஷான்டொங் மாகாணம் டெசோவ் நகர் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் நேற்று(05) ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் நேற்று நள்ளிரவில் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இதன் தொடர்ச்சியாக சீனாவில் இன்று அதிகாலையில் ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது சீனாவின் தலைநகர் பீஜிங் பகுதியில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெசோவ் நகரில் இருந்து தெற்கே 26 கிலோ மீற்றர் தெலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் அதிகாலை 2.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
21 பேர் காயம்
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்பட மொத்தம் 126 கட்டிடங்கள் இடிந்து சேதமான நிலையில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மக்கள் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த போது அதிகாலை 2.33 மணியளவில் சீனாவின் டெசா நகர் அருகே திடீரென கட்டிடங்கள் குலுங்கின. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் கண்விழித்து அலறி அடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர் எனக் குறிப்பிடப்படுகின்றது.