அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலத்தின் ஊடாக நாடாளுமன்றத்தை 2 ஆண்டுகளின் பின்னர் கலைக்க முடியும் என்ற சட்டத்தை மாற்றி அதனை 4 ஆண்டுகள் வரை கலைக்க முடியாதென்ற மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா எச்சரித்துள்ளார்.
அதிபரின் அதிகாரங்களை குறைப்பதை நோக்கமாக கொண்டு அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் மக்களை ஏமாற்றி அவர்களை அடக்கி ஆட்சி செய்யும் வகையிலான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தக்கூடாதெனவும் தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கு முரணானதா
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேவையான வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் நீதி, அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் வடிவமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலங்கள் உயர் நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டு அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் அரசியலமைப்புக்கு முரணானதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக முதலில் அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் வடிவமைக்கப்பட்டது.
அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து மீண்டும் சட்டமூலம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல சுற்று திருத்தம்
பல சுற்று திருத்தங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
இவ்வாறான நாடாளுமன்ற சட்டமூலத்தை கேள்விக்குட்படுத்தக்கூடிய கலாசாரத்தை விஜயதாச ராஜபக்ச மாற்றியுள்ளார்” என்றார்.
