மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று....
இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து அனைத்துலக அரங்கில் பகிரங்கப்படுத்தியமையினால் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குமார் பொன்னம்பலத்தின் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்காத நிலையில், அவரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலம் 2000 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
அந்த வகையில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த கழ்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணிகளான சுகாஸ், காண்டீபன் உட்பட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியிலும் அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட இணைப்பாளர் சுரேஷால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
குமார் பொன்னம்பலம் மரணித்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அவருக்கு மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.