தொடரும் இந்தியாவின் உதவி : இன்றும் மற்றுமொரு திட்டம் மக்களிடம் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையின் காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘திதுல’ மாதிரிக் கிராமத்தில் உள்ள 24 வீடுகள்,இன்று(22)பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி எச். எம். சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து வீடுகளைத் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தனர்.
மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டம்
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இலங்கையின் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சுடன் இணைந்து நாட்டின் 25 மாவட்டங்களிலும் மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட வீடமைப்புக் குழுக்களினால் தெரிவுசெய்யப்படும் குடும்பங்களுக்காக 24 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் அமைக்கப்படுகின்றது.
21 மாவட்டங்களில் மாதிரிக் கிராமங்கள் திறப்பு
இத்திட்டத்தின் கீழ் இதுவரை மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பகா, அனுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு, திருகோணமலை, மொனராகலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, இரத்தினபுரி, அம்பாறை, குருநாகல், கேகாலை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய 21 மாவட்டங்களில் மாதிரிக் கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் முன்னேற்றம் தற்போது சுமார் 98.6 சதவீதத்தை எட்டியுள்ளது. எஞ்சியுள்ள மூன்று மாதிரிக் கிராமங்களும் விரைவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. .
இந்நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், காலி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |