ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் 24 வீத சம்பள அதிகரிப்பு : சஜித் உறுதி
நாட்டிலுள்ள ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்குமான சம்பளத்தை 24 வீதத்தால் அதிகரிப்பதுடன், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மற்றும் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்போம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இன்று (03) வவுனியாவில் (Vavuiniya) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 31 ஆவது மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “எமது நாட்டின் அரச கொள்கைகளை செயற்படுத்துவது அரச ஊழியர்கள் ஆகும். தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற சந்தர்ப்பத்தில், திடீர் திடீரென்று சம்பளத்தை அதிகரிப்போம் என்று பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.
தபால் மூல வாக்களிப்பு
இந்த நிலையில், ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை 24 வீதத்தால் அதிகரிப்பதோடு, வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 17,800 ரூபாயிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரித்து, அடிப்படைச் சம்பளத்தை 57 500 ரூபா வரை அதிகரிப்போம்.
தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம். 6-36 வீதமாக ஆக காணப்படுகின்ற வரிச்சூத்திரத்தை 1-24 வீதம் வரை குறைத்து, அரச ஊழியர்களையும் நடுத்தர வகுப்பினர்களையும் வலுப்படுத்துவோம்.
சுமார் 7 இலட்சம் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள இருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்திக்கு உங்களுடைய வாக்கை அளிக்குமாறு கோருகின்றோம்.
அத்தோடு அரச ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களுக்கான சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
ஐக்கிய மக்கள் சக்தி
முகாமைத்துவ, அபிவிருத்தி துறை, கிராம உத்தியோகத்தர், விவசாயத் துறை, கல்வித்துறை, மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரச ஊழியர்களும் இந்நாட்டின் வளங்களாகும். அரச ஊழியர்கள் இந்நாட்டின் சுமை என்று இந்த அரசாங்கம் கருதியது. அரச சேவைத் துறை இந்த நாட்டை பாதிக்கின்றது என்று மாற்று அரசியல் சக்திகள் கூறியது.
அரச சேவையை பாதுகாத்து, புதிய பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி, திறமைகளையும் ஆளுமைகளையும் தொழில்நுட்பத்தின் ஊடாக விருத்தி செய்து அதனை முன்னெடுத்துச் செல்வது ஐக்கிய மக்கள் சக்தி.
காவல்துறையினருக்கு வழங்கிய மூன்று மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதோடு, பதவி உயர்வுகளையும் மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
முப்படைகளில் வன் ராங்க் ஒன் பே திட்டத்தை செயற்படுத்துவதோடு, சிவில் பாதுகாப்பு அதிகாரிகளையும் பாதுகாத்து எமது நாட்டின் அரச சேவையை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அத்தோடு அரச சேவையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பயிற்சிகளும் வழங்கப்படும்“ என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |