இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு(படங்கள்)
புதிய இணைப்பு
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 25 இந்திய கடற்தொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளதோடு கடற்தொழிலாளர்களின் 02 ட்ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்திய கடற்தொழிலாளர்கள் 25 பேரும் படகுகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய கடற்தொழிலாளர்களை பருத்தித்துறை பதில் நீதவான் முன்பாக முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இன்று (10) அதிகாலை கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதனையடுத்து, இந்திய கடற்தொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க சிறிலங்கா கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் குறித்த கடற்தொழிலாளர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |