தோட்ட தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பள உயர்வு: முன்னாள் அதிபர் வழங்கிய ஆலோசனை
சடுதியான வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு மத்தியில் பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பளம் என்பது சாத்தியமற்றது எனவும் நாளாந்த சம்பளம் 2000 ரூபாவாக வழங்கப்பட வேண்டுமெனவும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உரம் தொடர்பில் கடந்த அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானத்தால் ஏற்பட்ட விளைவுகளை குறுகிய காலத்துக்குள் சீரமைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெறுமதி சேர் வரி
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள், நெற்பயிர்ச்செய்கை உட்பட மரக்கறி, பழ வகை பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் உர பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
புதிய வரி கொள்கையில் விவசாய உபகரணங்களை உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டுமானால், உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும், ஆகவே விவசாய பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி விதிப்பை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சம்பள அதிகரிப்பு
கடந்த அரசாங்கம் விவசாயத்துறை தொடர்பில் எடுத்த தவறான மூர்க்கத்தனமான தீர்மானத்தால் ஒட்டுமொத்த விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட விளைவுகளை குறுகிய காலத்துக்குள் சீர்படுத்த முடியாது, உர பற்றாக்குறையால் பெருந்தோட்டத் தொழிற்றுறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பினால் பெருந்தோட்ட மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள், தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு மத்தியில் 1000 ரூபா சம்பளம் சாத்தியமற்றது. ஆகவே தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 2000 ரூபா வழங்க வேண்டும் ” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |