சூறாவளி அபாயத்தில் 25 இலங்கை படகுகள்: இந்திய எல்லைக்குள் நுழைய அனுமதி
நாட்டைச் சூழ்ந்துள்ள சீரற்ற வானிலை காரணமாகப் பாதுகாப்பாக இலங்கை திரும்ப முடியாமல் இந்தியாவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் தவித்துக்கொண்டிருந்த 25 இலங்கை கடற்றொழில் படகுகள், ஆபத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திடம் விடுத்த விசேட வேண்டுகோளை விடுத்துள்ளது.
குறித்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சூறாவளி நிலைமை
வங்காளக் விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள ஒர்னாப் சூறாவளி நிலைமை காரணமாக இந்தியாவை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் சிக்கியுள்ள இலங்கை கடற்றொழில் படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் அமைச்சு இந் நடவடிக்கையை எடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக பாதிப்பிற்குள்ளான கடல் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான கடற்பகுதிகள் அல்லது துறைமுகங்களை நோக்கி நகருமாறு சம்பந்தப்பட்ட படகுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கடல் பகுதியில் தங்கியுள்ள அனைத்துப் படகுகளின் உரிமையாளர்களுக்கும் தற்போதைய அபாயகரமான சூழலில் அடுத்து பின்பற்ற வேண்டிய உத்தியோகபூர்வ நடைமுறைகள் குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் மூலம் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாட்களில் வெளியிடப்படும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கடற்றொழில் மற்றும் கடல்சார் வளங்கள் அமைச்சு அனைத்து கடற்றொழில் சமூகத்தினருக்கும் அறிவுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |