இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்: இரண்டு மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், இரண்டு மாத ஆண் குழந்தையின் வயிற்றுக்குள் மற்றொரு கரு இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினரின் இரண்டு மாத ஆண் குழந்தையின் வயிறு திடீரென வீக்கமடைந்ததுடன், குழந்தைக்கு அவ்வப்போது வாந்தியும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பெற்றோர் குழந்தையை ராய்ச்சூர் மாவட்டத்தின் சிந்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஃபீட்டஸ் இன் ஃபெட்டு’ (Fetus in fetu)
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் கட்டி போன்ற அமைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் மூலம், அது கட்டி அல்ல என்றும், குழந்தையின் வயிற்றுக்குள் கரு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து குழந்தைக்குச் சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவிக்கையில், கர்ப்பகாலத்தில் உருவாகும் இரட்டைக் கருக்களில் ஒன்று இயல்பாக வளர்ச்சியடையும்போது, மற்றொரு கரு வளர்ச்சியடையாமல், வளர்ந்து வரும் கருவின் உடலுக்குள் சிக்கிக்கொள்ளும் அரிய நிலையே ‘ஃபீட்டஸ் இன் ஃபெட்டு’ (Fetus in fetu) என அழைக்கப்படுகிறது.
இத்தகைய அரிய நிலை, சுமார் 50 இலட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட மேலதிக மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், அறுவை சிகிச்சை தேவையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் இவ்வாறான சம்பவம் பதிவாகியிருப்பது இது மூன்றாவது முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கிற்கு அருகே கடலில் தீப்பற்றிய கப்பல்: மர்மச் சம்பவத்தால் பதற்றம் - அவசர எச்சரிக்கை விடுத்த UKMTO
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |