மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள்...! கசிந்த உளவுத்துறை தகவல்: அரசுக்கு எச்சரிக்கை
தற்போதைய அரசாங்கத்திற்கும் எதிராக மக்கள் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என உளவுத் துறைத் தகவல்கள் எச்சரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்துள்ளார்
மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கும், அவற்றுக்குத் தலைமை தாங்குபவர்களைக் கைது செய்து நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கும் புதிய சட்டமூலத்தைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்கெனவே நடைமுறையிலிருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஊடாக முப்பது ஆண்டுகால ஆயுத மோதல்களையும் தெற்கில் 1970கள் மற்றும் 1988-1989 காலப்பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்களையும் கட்டுப்படுத்த முடிந்ததாகக் ரோஹன பண்டார கூறினார்.

கடந்த காலங்களில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்களாகவும் பொதுச் சொத்துக்களை அழித்து அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்களாகவும் இருந்த தரப்பினருடன் தொடர்புடையவர்கள் தற்போதைய அரசாங்கத்திலும் செல்வாக்குச் செலுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டில் தற்போது பயங்கரவாதமற்ற சூழல் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில் புதிய சட்டமூலத்தை மேலும் கடுமையாக்கி அவசரமாகக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் நிர்வாகத்தை முன்னெடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாகவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இரண்டைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாகவும் ரோஹன பண்டார தெரிவித்தார்.
வீதிகளில் இறங்கிப் போராட்டம்
இதனால் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதைப் போன்று மக்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடக்கூடும் எனப் புலனாய்வுத் தகவல்களும் அரசியல் கணிப்புகளும் எச்சரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கும், அவற்றுக்குத் தலைமை தாங்குபவர்களைக் கைது செய்து நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கும் புதிய சட்டமூலத்தைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக ரோஹன பண்டார குற்றஞ்சாட்டினார்.
புதிய சட்டமூலத்தில் பச்சை குத்துதல், முடி அலங்காரம் மற்றும் ஆடை வடிவமைப்பு தொடர்பான பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் இத்தகைய ஏற்பாடுகள் அரசாங்கத்தின் அச்சத்தை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
ஒருபுறம் மதகுருமார்களின் சாபங்களுக்கு அரசாங்கம் அஞ்சுவதாகவும் மறுபுறம் மதச்சார்பற்றவர்களாகச் செயற்பட்டவர்கள் தற்போது வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் போக்கு காணப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |