ஒரு எண்ணில் ரூ.80 கோடியைத் தவறவிட்ட இந்தியர்: லாட்டரியில் ரூ.12.95 கோடி வெற்றி
இந்தியாவைச் சேர்ந்த ராவ் என்பவர், ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் இரண்டாம் பரிசை வென்று இந்திய மதிப்பில் 12.95 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி, ஐக்கிய அரபு அமீரக லாட்டரியின் இணையதளத்தில் ‘ஈஸி பிக்’ (Easy Pick) முறையைப் பயன்படுத்தி அவர் லாட்டரிச் சீட்டொன்றை வாங்கியுள்ளார்.
அந்த லாட்டரிச் சீட்டுக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ள நிலையில், முதல் பரிசுக்கான எண்களில் ஒன்று மட்டுமே அவரது எண்கள் வேறுபட்டிருந்துள்ளது.
கோல்டன் விசா
இதனால், சுமார் 80 கோடி ரூபாய் பெறுமதியான முதல் பரிசை ஒரே ஓர் எண்ணில் அவர் தவறவிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு குறித்து ராவ் தெரிவிக்கையில்,
“நான் அமைதியாக அமர்ந்து இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஐக்கிய அரபு அமீரக லாட்டரியிலிருந்து எனக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது.
ஆரம்பத்தில் அது வழக்கமான சரிபார்ப்பு மின்னஞ்சல் என நினைத்தேன்.
பின்னர் அந்தச் செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். சிறிது நேரம் என்ன செய்வதென்றும் என்ன சொல்வதென்றும் தெரியாமல் அமர்ந்திருந்தேன்.
முதலில் இந்தச் செய்தியை எனது மனைவியிடம் தெரிவித்தேன். அவர் எதிர்பாராத இந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார்.
நாங்கள் இருவரும் எங்களது இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம்.
தற்போது கிடைத்துள்ள இந்தப் பணத்தையும் எனது மனைவியுடனும் குழந்தையுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள் கோல்டன் விசா கிடைக்கும் என நம்பியிருந்தேன்.
தற்போது அதற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கோல்டன் விசா கிடைத்தவுடன், எனது மனைவியுடன் உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டுள்ளேன்.
உலக நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. எனது மனைவிக்கும் பயணம் செய்வதில் அதிக ஆர்வம் இருப்பதால், அவருடன் இணைந்து பல இடங்களுக்குச் செல்ல விரும்புகிறேன்.
மேலும், எனது மூத்த மகன் சொந்தத் தொழில் தொடங்குவதற்கும், இளைய மகனின் கல்விச் செலவுகளுக்கும் இந்தப் பணத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |