ஆசிரியர் தொழிலுக்காக காத்திருப்போருக்கு பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் 25,000, ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் நிலையில் ஏப்ரலில் நீதிமன்ற வழக்கு தீர்ப்பு கிடைத்ததும் பட்டதாரிகளுக்கான நியமனம் உடனடியாக வழங்கப்படும் என கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்கவே பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள முடியும் என குறிப்பிட்ட பிரதமர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சட்டமா அதிபர் ஊடாக நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேர்தல் விஞ்ஞாபனம்
இது குறித்து பிரதமர் மேலும் தெரிவிக்கையில், "பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக இருப்பது, உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்காகும்.
அடுத்த வழக்கு விசாரணையின் போது வெற்றிடங்களை நிரப்புவதற்கு எமக்கு அனுமதி கிடைத்தால் உடனடியாக அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம்.
இந்த உண்மையான நிலை தெரியாமல் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு எமது தேர்தல் விஞ்ஞாபன கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் படியே தொழில் வாய்ப்பு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதற்கென சில ஒழுங்கு விதிகள் காணப்படுகின்றன. கடந்த அரசாங்கங்கள் போன்று எந்தவித முறைமையும் பின்பற்றாமல் உயர்ந்தவரா குட்டையானவரா? என்பதைப் பார்த்து நாம் ஒருபோதும் தொழில் வழங்கப் போவதில்லை.
அரச சேவை ஆணைக்குழு
அதற்கென ஒரு முறை இருக்கின்றது. அரச சேவை ஆணைக்குழு வழங்கும் தீர்மானங்களுக்கு இணங்கி முறையான கொள்கையின்படி தொழில் வாய்ப்பு வழங்கப்படும்.
குறிப்பாக தொழில் வெற்றிடம் காணப்படும் துறைகளுக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதற்கு போட்டிப்பரீட்சை, நேர்முகப்பரீட்சை நடத்தியே ஆட்சேர்ப்பு இடம்பெறும்.
தற்போது வெற்றிடமாகவுள்ள துறைகளுக்கு ஆட்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 10ஆயிரம் பேருக்கு தொழில் வழங்கும் நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம். வழக்கு காரணமாகவே ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியாமல் உள்ளது.
சுமார் 25,000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் உடனடியாகவே பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்