படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல்!
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்தில் நேற்று (19) திங்கட்கிழமை இந்த நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு விசேடமாக வருகை தந்திருந்த தெற்காசிய மகளிர் ஊடக கட்டமைப்பின் சிறப்பு பிரதிநிதிகள் இணைந்து நிமலராஜனின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலையினை அணிவித்திருந்தனர்.
பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி
மூத்த ஊடகவியலாளர் நடேசப்பிள்ளை வித்தியாதரன் பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து சக ஊடகவியலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம், சுண்டிக்குளியில் அமைந்திருந்த அவரது இல்லத்தில் வைத்து நிமலராஜன் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்டு 26 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், இந்த படுகொலைக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என இதன்போது ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (19) இடம்பெற்றது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

செய்திகள் - தவசீலன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |