எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆயிரக்கணக்கான தாதியர்களுக்கு நியமனம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2,847 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்
இன்று (25) முற்பகல் அலரிமாளிகை வளாகத்தில் நடைபெற்ற கொழும்பு தாதியர் பயிற்சிப் பாடசாலையின் 2021 ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்த மாணவ தாதியர்களுக்கு தொப்பி அணிவித்தல் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரவிக்கையில்,
மார்ச் மற்றும் ஓகஸ்ட் மாதங்களிலும் நியமனம்
2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம்1,949 பேருக்கும், ஒகஸ்ட் மாதம் 2,920 பேருக்கும் தாதியர் நியமனங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2030 ஆம் ஆண்டளவில் தாதியர் சேவைக்காக 13,600 பேரை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, அந்த இலக்கில் 50% ஐ இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை
தாதியர் சேவையில் இணையும் அனைவரதும் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், குறைந்தபட்ச வசதிகளுடன் இயங்கி வரும் தாதியர் பயிற்சிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்காக உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து தற்பொழுது திட்டமிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது ஒரு கௌரவமான தொழில்
நாட்டின் இலவச சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதில் தாதியர் சேவை மிகவும் முக்கியமானது எனவும், இது ஒரு கௌரவமான தொழில் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில், முதலாம் ஆண்டு செய்முறைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவத் தாதியர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 4 மணி நேரம் முன்