ஐரோப்பாவிற்கு குடியேறச் சென்ற 298 குழந்தைகளுக்கு நடந்த அவலம்
2023ஆம் ஆண்டு மத்திய தரைக்கடலை கடக்க முயன்ற வேளை 289 குழந்தைகள் கடல் அன்னையால் காவுகொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி தொடக்கம் ஜூன் வரை) சுமார் 289 குழந்தைகள் ஐரோப்பாவிற்கு குடியேறுவதற்காக மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்ற போதே இவ் அவலம் நிகழ்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை நேற்று(14) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பு யுனிசெப் (UNICEF) குறிப்பிடுகின்றது.
உயிரிழந்தவர்களின் புள்ளிவிபரம்
"உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உண்மையான புள்ளி விபரங்களை விட அதிகமாக இருக்கக் கூடும்" என UNICEF-இன் புலம்பெயர் மற்றும் இடம்பெயர்வு பிரிவின் தலைவர் வெரீனா க்னாஸ் தகவல் வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு, அமைதி மற்றும் சிறந்த வாய்ப்புகளுக்காக மத்திய தரைக்கடல் பகுதியினைக் கடக்க முயல்கின்ற குழந்தைகளில் அண்ணளவாக வாராந்தம் 7 பேர் என்ற அளவில் உயிரிழக்கிறார்கள் அல்லது காணாமல் போய் விடுகிறார்கள் என UNICEF இன் அறிக்கை கூறுகின்றது.
இது தொடர்பிலான புள்ளி விபரங்களை நோக்குவோமானால்,
71 சதவீதமான குழந்தைகள்
இந்த ஆண்டில் (2023) முதல் ஆறு மாதங்களிற்குள் மட்டும் ஏறத்தாழ 11,600 எண்ணிக்கையானோர் மத்திய தரைக்கடல் பகுதியைக் கடந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் (2022) ஓப்பிடுகையில் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அது மாத்திரமல்லாமல் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களிற்குள் 3,300 குழந்தைகள் ஐரோப்பாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். இவர்களில் 71 சதவீதமான குழந்தைகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் குடிபெயர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தக் குழந்தைகள் தாம் தனியாக இல்லை என்பதனை உணர வேண்டும், இதற்கு உலகத் தலைவர்கள் விரைவாக செயற்பட்டு முறையான பயனுள்ள தீர்வுகளைத் தேடுவதில் உறுதியாக நிற்க வேண்டும் எனவும் வெரீனா க்னாஸ் தெரிவித்துள்ளார்.