எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு நாள்(படங்கள்)
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம் ஜி இராமசந்திரனின் 36 வது நினைவு தினம் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலபிட்டி என்ற பிரதேசத்திலேயே, 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி எம்.ஜி.ஆர் பிறந்தார்.
மூன்று முறை முதலமைச்சர்
தமிழ்த் திரைப்பட நடிகராக அறிமுகமாகி தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர்.
இதன் பின்னர் மக்களுக்காக அரசியலில் களமிறங்கினார். சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். மரணம்
1987-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் திகதி இரவு ராமாவரம் தோட்டத்தில் உள்ள தன் இல்லத்தில் உறங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு, நள்ளிரவு 12.30 மணிக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மயக்கமடைந்த எம்.ஜி.ஆருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சைபலன் அளிக்காத நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் எம்.ஜி.ஆர் உயிர் பிரிந்தது.
வவுனியாவில் நினைவு தினம்
எம்.ஜி.ஆரின் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் 40-க்கும் மேற்பட்டோர் தீக்குளித்தும் அதிர்ச்சியாலும் உயிரிழந்தனர்.
36 வது நினைவு தினமான இன்று இந்தியாவில் பல இடங்களில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுவதோடு அரசியல்வாதிகளும் திரைதுறையினரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஈழ விடுதலைப்போராட்டத்தின் போது தமிழ் தரப்பிற்கு ஆதரவு அளித்தமையால் இவர் ஈழத்தமிழர்களால் இன்று வரை கொண்டாடப்படுகிறார்.
அந்த வகையில்36வது நினைவு தினம் இன்று(25) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இதன்போது எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா எம்ஜிஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வர்த்தக நலன்புரி சங்கத்தின் தலைவர் கோ. சிறீஸ்கந்ததராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சட்டத்தரணி தயாபரன், நற்பணி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |