38 பேர் நாட்டை பொறுப்பேற்க முன்வந்ததற்கு ரணிலே காரணம் : கட்சி தாவிய ராஜித வீராப்பு
அன்று ஆட்சியை ஏற்க ஒருவரேனும் முன்வரவில்லை. ஆனால் இன்று நாட்டை பொறுப்பேற்க 38 பேர் முன்வந்துள்ளனர். அந்த நிலைக்கு நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) வெற்றியென நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன (rajitha senaratne)தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜித சேனாரத்ன எம்.பி. இதனைக் குறிப்பிட்டார். அவா் மேலும் தெரிவிக்கையில்,
எவரும் நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை
“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இன்று 39 பேர் முன்வந்துள்ளனர். அவர்கள் பெருமளவு செலவு செய்து பிரசாரம் செய்கின்றனர். 2022 இல் இவர்கள் எவரும் நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை.
அன்று நான் எதிர்க்கட்சி தலைவருடன் இருந்தேன். அவரை அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினோம். அன்று ஹர்ஷ டி சில்வா போன்றவர்கள் அதிகாரத்தில் கை வைத்தால் சுட்டுவிடும் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு அச்சம் காட்டினர்.
மக்கள் வரிசைகளில் நின்றுநின்று உழன்று போயினர்
மக்கள் வரிசைகளில் நின்றுநின்று உழன்று போயினர். துறைமுகத்துக்கு வந்த கப்பல்கள் திரும்பிச் சென்றன. நாட்டு மக்களுக்கு ஒரு நாள் சாப்பாடு கூட கொடுக்க முடியாமல் இருந்தனர். ஒரு சதம் கூடம் இல்லாத நாடுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்தது.
சஜித்துக்கும் பதவி மீது ஆசை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்ட பின்னர் சஜித்துக்கும் பதவி மீது ஆசை வந்தது. மறுமுனையில் அநுரவுக்கும் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். அநுரவும் ஓடி மறைந்தார். சரத் பொன்சேகாவையும் அழைத்தார். அவரும் நிபந்தனைகளை கூறினார்.
அன்று ஒருவரும் ஆட்சியை ஏற்க தயாராக இருக்கவில்லை. அப்படியிருந்த நாட்டை பொறுப்பேற்க 38 பேர் வரும் நிலைக்கு இந்த நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |