2025 இல் சா்வதேச அளவில் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள்!
உலகம் முழுவதும் கடந்த 2025-ஆம் ஆண்டில் செய்தி சேகரிப்புப் பணியின்போது 129 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழு (CPJ) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டுகளை விடப் புதிய உச்சம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலின் தாக்குதல்கள்
இந்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு (சுமார் 86 பேர்) இஸ்ரேலின் தாக்குதல்களால் நிகழ்ந்துள்ளன.
இதில் காஸாவில் கொல்லப்பட்ட பலஸ்தீன செய்தியாளர்கள் மட்டுமன்றி யேமனில் ஹௌதி ஊடக மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 31 ஊடகப் பணியாளர்களும் அடங்குவர்.

மேலும், நவீனப் போர்முறையில் ட்ரோன் (Drone) தாக்குதல்கள் செய்தியாளர்களைக் கொல்லும் புதிய ஆயுதமாக உருவெடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 39 செய்தியாளர்கள் இத்தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர்.
போர் வலயங்களைத் தவிர்த்து மெக்ஸிகோவில் ஆறு பேரும் பிலிப்பின்ஸில் மூன்று பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்களின் மரணம்
இந்தியாவில் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டிய முகேஷ் சந்திரக்கர் போன்ற செய்தியாளர்களின் மரணம், உள்ளூர் அளவிலான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
செய்தியாளர்களைக் கொல்வது மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தினரைக் குறிவைக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

குறிப்பாகக் காஸாவில் 700 இற்கும் மேற்பட்ட செய்தியாளர்களின் உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை, 2025 டிசம்பர் நிலவரப்படி சீனா, மியான்மர் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 330 செய்தியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |