11 பிரமுகர்களுக்கு வி.ஐ.பி பாதுகாப்பு: முற்றாக மறுக்கும் அரசாங்கம்
11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று (14) விளக்கம் அளித்தார்.
அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, அமைச்சர் இவ்விஷயம் குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
சிலருக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலருக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அந்தப் பட்டியலில் அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமாரா, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியன்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்துமபண்டார, எச்.ஏ. தர்மசேன மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 11 பேர் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை
இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், விசேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரினால் இந்த பிரமுகர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக காவல்துறைமா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதற்கமைய, குறிப்பிடப்பட்ட நபர்கள் எவருக்கும் எவ்வித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என பிரதி காவல்துறை மா அதிபர் அறிவித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |