கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு: அரசாங்கம் எடுத்துள்ள துரிமான முடிவு
ஒரு நாளைக்கு 4,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கடவுச்சீட்டு கொள்முதல்
பொது சேவை ஆணைக்குழுவின் ஒப்புதலுடன், ஒப்பந்த அடிப்படையில் திணைக்களத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற அதிகாரிகளை பணியமர்த்துவதற்கும், அந்த சேவையை வழங்குவதற்குத் தேவையான கூடுதல் பணியாளர்களை வழங்குவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து தற்போது அரசசேவையில் உள்ள அதிகாரிகளை இணைப்பதற்கும் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அத்தோடு, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, தற்போதைய வழங்குனர்களிடமிருந்து 1,100,000 வெற்று "P" வகை கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கான கொள்முதல் செயல்முறை இப்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |