நாமல் ராஜபக்சவிற்கு உயர் நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) , எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த அழைப்பாணையானது, ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாக கூறி, இந்திய நிறுவனமொன்றிடமிருந்து 70 மில்லியன் ரூபாயை பெற்று குற்றவியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியது குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை
இதன்போது, ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து ரூ.70 மில்லியன் பெற்று குற்றவியல் முறைகேடு செய்ததாக நாமல் ராஜபக்சவுக்கு எதிரான சட்டமா அதிபரின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய அமைச்சருமான வசந்த சமரசிங்க செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
நாமலின் கைது
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிக்கை செய்திருந்தது.
அந்த வழக்கில் நாமல் ராஜபக்ச ஒரு சந்தேக நபராக கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |