நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் - வெளியான பயங்கர நபர்களின் பெயர்கள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில், 31 பேர் உயிரிழந்ததுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இது இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான சிறை வன்முறைகளில் ஒன்றாக பதிவாகியது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்த வழக்கு நேற்று நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, இச்சம்பவம் தொடர்பாக நான்கு கைதிகள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த கொடூர வன்முறை சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்களாக, "ஹீனட்டியன சுபுன்" எனப்படும் சுபுன் மதுஷங்க, ஷேன் திலான் சில்வா, "களு மல்லி" எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் "பபா" எனப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சந்தேகநபர்களை நேற்று (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதிகளிடம் வாக்குமூலம்
இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் எவர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.