நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம், நெடுந்தீவு குமுதினி படுகொலையின் (Kumudini boat massacre) நாற்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டது.
நெடுந்தீவு - மாவிலி துறையில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவேந்தல் நினைவு தூபியில் குமுதினி படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் விஸ்வலிங்கம் ருத்திரன் தலைமையில் நேற்று (15) நடைபெற்றது.
இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம், அக வணக்கம் செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வு
1985ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 15 ஆம் திகதி இதே போன்று ஒரு நாளில் நெடுந்தீவு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த குமுதினி படகை வழி மறித்து கடற்படையினர் அப்படகில் பயணம் செய்த ஏழு மாத பெண்குழந்தை உட்பட 36 பொதுமக்களை வெட்டி கொலை செய்த கொடூர சம்பவம் பதிவாகியிருந்தது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வ மத குருக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு குமுதினி படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் இந்த நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் நான்காவது நாளை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
