சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லமுற்பட்ட 47 பேர் மேற்கு கடற்பரப்பில் கைது
47 பேர் கைது
கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர்.
நேற்று (27) இரவு நீர்கொழும்பு மேற்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றில் வைத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இந்த மோசடியில் ஈடுபட்ட 05 பேர் உட்பட 34 ஆண்கள், 06 பெண்கள் மற்றும் 07 குழந்தைகள் உள்ளனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
01 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ, நாத்தாண்டிய, சிலாபம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 01 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
விரைவாகப் பணம் சம்பாதிப்பதற்காக இவ்வாறான ஆபத்தான கடற்பயணங்களை ஏற்பாடு செய்யும் ஆட்கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி சட்டத்தின் முன் குற்றவாளிகள் ஆவதைத் தவிர்க்குமாறு இலங்கை கடற்படை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் எல்லைகள் சட்டவிரோத கடல்சார் குடியேற்றத்திற்கு மூடப்பட்டுள்ளதால், அத்தகைய நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள், இதனால் அவர்கள் எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாக ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என்று அவர்கள் மேலும் எச்சரித்துள்ளனர்
