ஐ.நா அரங்கில் சிறிலங்கா விசனம்
போர்க்குற்றங்கள் குறித்த சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறைகுறித்து சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ( G.L. Peris) ஐ.நா மனித உரிமை பேரவையில் விசனம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் இன்று இடம்பெற்ற உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர், சிறிலங்காவின் பயங்கரவாத தடுப்புச்சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் தமது அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கையிடல் மற்றும் அது குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ள நிலையில் இன்று இடம்பெற்ற உயர்மட்டப் பிரிவில் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உரையாற்றியிருந்தார்.
அவர் தனது உரையில் எமது நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு வந்து 43 வருடங்களின் பின்னர், தற்போது தமது அரசாங்கம் அதனை மறுசீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மறுசீரமைப்புகளின் போது கருத்துச் சுதந்திரம் போன்ற ஜனநாயக சுதந்திரங்களை கட்டுப்படுத்தக் கூடாது என்ற விடயத்திலும், விசாரணைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்திலும் தமது அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எமது நாட்டின் அனுமதியின்றி மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட 46 கீழ் 1 தீர்மானத்தில் உள்ளடக்கபட்ட விடயங்களால் பாதகமாக நிலவரங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறை குறித்த விசனத்தையும் அவர் வெளியிட்டார்.
அத்துடன் இவ்வாறான பொறிமுறைகளால் நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டு இனங்களுக்கு இடையில் இருக்கும் கடந்த கால கசப்புக்களும் ரணங்களும் மீண்டும் கிளறப்படுவதாகவும் அதன்மூலம் சமூகங்கள் பிளவுபடுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
