நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்
புதிய இணைப்பு
பத்தாவது நாடாளுமன்றத்தின் இன்றைய (17) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய நாளில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாணமும் புதிய சபாநாயகரின் நியமனமும் இடம்பெறவுள்ளது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்றம் இன்று (17) முற்பகல் 9.30 மணிக்குக் கூடியதன் பின்னர் முதலில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் இடம்பெறவிருப்பதுடன் இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகரின் தெரிவு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய இவ்வாறு நடைபெறும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (16) இடம்பெற்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) தலைமையிலான நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
பதவிப் பிரமாணம்
டிசம்பர் 17 ஆம் திகதி (இன்று) மற்றும் 18ஆம் திகதியில் (நாளை) முன்னர் தீர்மானிக்கப்பட்ட நாடாளுமன்ற அலுவல்களில் சில திருத்தங்கள் இதன்போது மேற்கொள்ளப்பட்டன.
இன்று மு.ப. 9.30 மணி முதல் 9.45 மணி வரை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியால் (SJB) பெயரிடப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வரும், புதிய ஜனநாயக முன்னணியால் (NDF) பெயரிடப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தெரிவுக்காகவும், அதன் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சபை ஒத்திவைப்பு பிரேரணை
பின்னர் மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 3.00 மணிவரை பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு தொகை மதிப்பீடு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நாளை மீண்டும் இந்த விவாதம் தொடரவுள்ளது.
இதற்கமைய முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய 2024 வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் குறைநிரப்புத் தொகை மதிப்பீடு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
இதன் பின்னர் பி.ப. 3.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளை (18) மு.ப. 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காகிதாதிகளுக்கான ஒதுக்கீடு
இதனைத் தொடர்ந்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5 மணி முதல்நாள் ஒத்திவைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்புத் தொகை மதிப்பீடு பற்றிய விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய முன்னர் தீர்மானிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட விடயங்களைப் பிறிதொரு தினத்தில் விவாதத்துக்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பி.ப. 5 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |