தொடரும் நெருக்கடி - 5 இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம்
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று காலை ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 212 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கிளிநொச்சி மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்த பாரதி டிஸ், அவரது தாய் முனியம்மா, அவரது இரண்டு மகன்கள் ஒரு மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இலங்கை கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து நேற்று காலை பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.
விசாரணை

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினர் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.