தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : மேலும் இருவர் கைது
தென்னிலங்கையின் பெலியத்தவில் அரசியல்வாதி உட்பட ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 2 சந்தேகநபர்களும் இன்று (26) ஹெரோயின் போதைப்பொருளுடன் காலி பகுதியில் வைத்து காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலிப் பிரதேசத்தில் வசிக்கும் 25 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கைப்பற்றல்
கைது செய்யப்படும் போது, அவர்களிடம் இருந்து 9 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின், மோட்டார் சைக்கிள், 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கூரான கத்தி என்பன காணப்பட்டன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில், நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சமன் குமாரவை நாளை வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வாகனத்தைச் செலுத்திய நபர்
தெய்யந்திர நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (25) சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தை குறித்த நபர் செலுத்தியதாக கூறப்படுகின்றது.
குறித்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 ரக துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்ட உந்துருளியையும், சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் நோக்கில் பயன்படுத்திய மற்றுமொரு சிற்றூர்ந்தும் காவல்துறையினால் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தது.
சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் வலியுறுத்தல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |