தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : பின்னணியில் வெளியான தகவல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் நேற்று முன்தினம் (23) ஐந்து பேர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சமன் குமார என்ற 54 வயதான பிரதான சந்தேகநபர் நேற்று (24) அக்குரஸ்ஸ பங்கமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
டுபாயில் இருந்து ஒப்பந்தம்
கொழும்பு மெனிங் சந்தையில் சில காலம் பணியாற்றிய சந்தேக நபர், கொலைகள் உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்கள் தொடர்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
நான்கு பேர் கொண்ட குழுவொன்றே கொலைக்காக வந்ததாகவும், டுபாயில் இருந்து பெறப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிடப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
பயணித்த வாகனம் மீட்பு
அத்துடன் அவர்கள் பயணித்த பல வீதிகளில் உள்ள சிசிடிவி காணொளி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்துள்ளதுடன் பல தகவல்களையும் திரட்டியுள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் காலி வித்யாலோக பிரிவெனாவிற்கு முன்பாக உள்ள வாகனத் தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டது.
இதேவேளை, குறித்த 5 பேரையும் கொலை செய்த இரண்டு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |