தமிழ் கட்சிகளை எச்சரிக்கும் தமிழ் தேசியம் சார்ந்த பெண்கள் அமைப்பு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை விடுத்தனர்.
தற்போது புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெண் பிரதமரை நியமித்து அரசியலில் பெண்களின் வகிபங்கினை சமமாக பேணி வருகின்றார். இந்த மாற்றம் வரவேற்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது.
ஆனால் தமிழ் பெண்களாகிய எமக்கு எமது தமிழ் கட்சிகள் எவையுமே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தினை சரியாக வழங்கவில்லை. நாம் நீண்ட காலமாக அரசியல் செயற்பாடுகளில் ஆண்கள் ஈடுபடுவதற்கு பல்வேறு வகையிலும் எமது உழைப்பை வழங்கி வருகிறோம் ஆனாலும் அரசியலில் நாம் நேரடியாக ஈடுபடுவதற்கு விமர்சனம் வழங்கப்படுவதில்லை.
பெண்களுடைய பிரச்சினைகளை வெளியில் கொண்டுவருவதற்கும் பெண்களுக்கு பெண்களே வாக்களிப்பதற்கும் மக்கள் மத்தியில் கருத்துக்களை தெரிவிக்கும் ஆண் அரசியல்வாதிகள பெண்களுக்கு வாக்களியுங்கள் என்றும் பெண்களிலே படித்த ஆளுமை மிக்க தலைமைத்துவம் கொண்ட பெண்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்துவதில்லை.
மாறாக பெண்களை எல்லா அரசியல் செயற்பாடுகளிலும் பயன்படுத்தும் ஆண் வேட்பாளர்கள் அவர்களை தேர்தல்களில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக அவர்களுடைய சேவை வழங்குவதற்கு இடமளிப்பதில்லை. இவ்வாறு பல கட்சிகள் எம்மை புறந்தள்ளி வருகின்றனர்.” குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வரும் காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |