வாகன இறக்குமதிக்கான 50 வீத மேலதிக வரி : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கைக்கான வாகன இறக்குமதிகளின் மீது அரசாங்கம் 50 வீத மேலதிக வரியை விதிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசின் இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கவுள்ளதாக அந்த சங்கம் மதிப்பிட்டுள்ளது.
புதிய மேலதிக வரி, சர்வதேச நாணயமாற்று வீத உயர்வு மற்றும் ஏற்கனவே உள்ள வரிகள் ஆகியவற்றின் கூட்டுத் தாக்கம் காரணமாக, வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப அவற்றின் விலைகள் 1.5 மில்லியன் ரூபாய் முதல் 2.5 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என சங்கம் எச்சரித்துள்ளது.
விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
தொழில்துறை மதிப்பீடுகளின்படி, வெவ்வேறு வகைப்பாட்டின் கீழ் உள்ள வாகனங்களின் விலைகள் பின்வருமாறு உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
அதற்கமைய சிறிய ரகக் சிற்றூந்துகளான Suzuki Alto / Mazda Carol 421,750 ரூபாயாகவும், Alto, Carol Hybrid - 542,250 ரூபாயாகவும், Suzuki WagonR / Mazda Flair - 482,000 ரூபாயாகவும், WagonR / Flair Hybrid - 602,500 ரூபாயாகவும், Nissan Dayz Highway Star - 662,750 ரூபாயாகவும், Mitsubishi EK X - 723,000 ரூபாயாகவும் உயரும்.

நடுத்தர சிற்றூந்துகளான Toyota Passo / Daihatsu Boon - 542,250 ரூபாயாகவும், Toyota Yaris - 602,500 ரூபாயாகவும், Toyota Axio Hybrid - 903,750 ரூபாயாகவும் அதிகரிக்கும்.
அதிநவீன விளையாட்டுப் பயன்பாட்டு வாகனங்களான Toyota Raize / Daihatsu Rocky / Subaru Rex Hybrid - 903,750 ரூபாயாகவும், Honda Vezel X 1,084,500 ரூபாயாகவும், Honda Vezel Z - 1,205,000 ரூபாயாகவும், Honda Vezel Z Play 1,325,500 ரூபாயாகவும் அதிகரிக்கும்.
நாணய மாற்று வீதங்கள் அதிகரிப்பு
இது குறித்து வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் உஸ்மான் அலி கருத்துத் தெரிவிக்கையில், "வாகன இறக்குமதியின் மீது இவ்வாறானதொரு பாரிய வரி விதிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ஏற்கனவே அமெரிக்க டொலர், ஜப்பானிய யென் மற்றும் பிரித்தானிய பவுண்ட் ஆகியவற்றின் நாணய மாற்று வீதங்கள் அதிகரித்துள்ளன. இவற்றுடன் அரசாங்கம் சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரியை 2.5 வீதத்தினால் உயர்த்தியது.
தற்போது இந்த 50 வீத மேலதிக வரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த வரிச்சுமையையும் நுகர்வோர் மீதே சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |