பொருளாதார நெருக்கடி : 50 பேர் எடுத்த விபரீத முடிவு
கடந்த சில நாட்களில் சுமார் 50 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளே காரணம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அதிபர் தேர்தலை நடாத்துவதற்கு பொருத்தமான சூழல் உள்ளதா என ஆராய்வதற்கு முன்னர் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டும் என நளின் பண்டார தெரிவித்தார்.
மக்களின் தலைவிதியை
நாட்டின் உண்மையான பிரச்சினைகளை அங்கீகரிக்கும் அரசாங்கமே நாட்டுக்கு தேவை, வங்குரோத்து அடைந்துள்ள மக்களுடன் நின்று அதிபரால் நாட்டைக் காப்பாற்ற முடியாது, நாட்டு மக்களின் தலைவிதியை ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் நளின் பண்டார மேலும் குறிப்பிட்டார்.
மக்களுக்காக அதிகபட்ச தியாகங்களை
எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி அரச எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், நாட்டு மக்களுக்காக அதிகபட்ச தியாகங்களைச் செய்து மனித முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்தும் நாட்டை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி பாடுபடும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனைக் குறிப்பிட்டதுடன், பண்டாரகம பிரதம அமைப்பாளர் நயனக ரன்வெல்லவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |