பொதுத்தேர்தலை கண்காணிக்கப்போகும் ஐயாயிரம் பேர்
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஐயாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டின் (பவ்ரல் அமைப்பு) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர்கள் அடர்த்திக்கு ஏற்ப கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், தேர்தல் நடைபெறும் நாளில் அந்த குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்றும், 340 நடமாடும் கண்காணிப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
குவிக்கப்படவுள்ள காவல்துறை
இதேவேளை இந்த பொதுத் தேர்தலுக்காக நாடு முழுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சுமார் எழுபத்தைந்தாயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்தறை தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.அவர்களுக்கு ஆதரவாக ஆயுதப்படைகளும் நிறுத்தப்படும்.
இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக சுமார் பத்தாயிரம் சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆளில்லா கமராக்கள் மற்றும் பாதுகாப்பு கமரா அமைப்புகள்
இது தவிர, தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மற்றும் இடையூறு விளைவிப்பவர்களை கண்காணிக்க ஆளில்லா கமராக்கள் மற்றும் பாதுகாப்பு கமரா அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் அந்தந்த அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு அருகில் சுற்றித் திரிந்து வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |