கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை: வெளியாகியுள்ள தகவல்
புதிய இணைப்பு
கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) டி எம் டி நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் புதிய இணையவழி முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அதன்படி, குடிவரவு குடியகல்வு இணையத்தளத்திற்கு (Department of Immigration & Emigration) பிரவேசித்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும்.
புதிய இணையவழி முறைமை
இந்த இணையதளத்தின் மூலம் எந்த நபருக்கும் நாளின் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் திகதி ஒன்றை முன்பதிவு செய்துக் கொள்ள முடியும். எனவே, திகதியை முன்பதிவு செய்யும் எதிர்பார்ப்புடன் நவம்பர் 6ஆம் திகதிக்குப் பிறகு பொதுமக்கள் வர வேண்டாம் எனத் தெரிவிக்கிறோம்.
அதேபோல், தற்போது நவம்பர் இறுதி வரை திகதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளோம். எனவே, டிசம்பர் முதலாம் திகதிக்கு பிறகு திகதி ஒன்றை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.” என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இணைய வழியின் ஊடாக திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கான அமைப்பை தயார் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) தெரிவித்துள்ளது.
அத்துடன், வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 'பி' பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடவுச்சீட்டு வழங்கும் முறை
அதேவேளை, இந்த தொகைக்கு மேலதிகமாக, நவம்பர் மாத இறுதிக்குள் சுமார் 100,000 கடவுச்சீட்டுகளும், டிசம்பரில் 150,000 கடவுச்சீட்டுகளும் மொத்தமாக 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பெறப்படும் என தெரிவித்துள்ளது. மற்றொரு தொகுதி கடவுச்சீட்டு வாங்கும் பணியும் தொடங்கியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 1,600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, டிசம்பர் தொடக்கத்தில் இந்தத் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் கோரும் கடவுச்சீட்டுகளின் அளவுக்கேற்ப கடவுச்சீட்டு வழங்கும் முறை மாற்றியமைக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போது இணைய வழியின் ஊடாக திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கான அமைப்பை தயார் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் அந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி
இதேவேளை, கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மோசடி கும்பல்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளது.
குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை பிடிப்பதற்கு குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் போதைக்கு அடிமையானவர்களை அதிகாலையில் இருந்து வரிசையில் நிறுத்தி வைப்பதாகவும் மதிய வேளையில் அந்த இடத்தை 5000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு தேவையானவர்களுக்கு வழங்குவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |