டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான 50,000 ரூபாய் கொடுப்பனவு : வெளியான தகவல்
டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக சமையலறை உபகரணங்கள் கொள்வனவிற்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபாய் கொடுப்பனவில் தற்போது 70 சதவீதம் வழங்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு வழங்கும் பணிகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்தப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தவகையில் 25 மாவட்டங்களில் மொத்தம் 156,805 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவுக்காகக் கணக்கிடப்பட்டதுடன், அவற்றில் 109,512 குடும்பங்களுக்கு இதுவரை குறித்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து குடும்பங்களுக்கும் உதவித்தொகை
நுவரெலியாவில் 1,191 குடும்பங்கள் இந்த உதவித்தொகையைப் பெற தகுதி பெற்றிருந்ததுடன், அந்த அனைத்து குடும்பங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாத்தளை மாவட்டத்தில் 1,253 குடும்பங்களில் 1,143 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், அது 91 சதவீதம் முன்னேற்றம் ஆகும்.
கண்டி மாவட்டத்தில் 8,409 குடும்பங்களில் 7,083 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் அது 84 சதவீதம் முன்னேற்றம் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறைவு செய்யப்பட்ட கொடுப்பனவு
அத்துடன் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க கணக்கிடப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 50,000 ரூபாய் கொடுப்பனவு 98 சதவீதமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 99 சதவீதமும், குருநாகல் மாவட்டத்தில் 91 சதவீதமும், அநுராதபுர மாவட்டத்தில் 84 சதவீதமும், கேகாலை மாவட்டத்தில் 93 சதவீதமும் உதவித்தொகை விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |