சிறிலங்கா தொடர்பான நிகழ்ச்சி நிரல்களுடன் ஐ.நா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
51ஆவது கூட்டத்தொடர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
சிறிலங்கா தொடர்பான நிகழ்ச்சி நிரல்களுடன் இன்று ஆரம்பமாகும் கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையினை முன்வைக்கவுள்ளார்.
கூட்டத்தொடரின் இன்றைய முதல் நாளில் சிறிலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கையினையும் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.
சிறிலங்கா தொடர்பான விவாதம்
2020ஆம் ஆண்டு சிறிலங்கா தொடர்பில் முன்வைக்கப்பட்ட 46 / 1 பிரேரணை செயற்படுத்தப்படும் விதம், மனித உரிமை விடயங்கள் என்பன குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் சிறிலங்கா தொடர்பான விவாதமும் இன்றைய தினம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன அழிப்புக்கு நீதிகோரிய ஒன்றுகூடல்
இந்த நிலையில் முதல்நாள் அமர்வை மையப்படுத்தி சிறிலங்காவில் இடம்பெற்ற இன அழிப்புக்கு நீதிகோரும் வகையில் சிறிலங்காவில் இருந்து சென்ற அரசியல் பிரமுகர்களின் தலைமையில் இன்று ஜெனிவாவில் ஒன்று கூடலொன்று நடத்தப்படவுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த ஒன்றுகூடலில் பங்கேற்பதற்காக வடக்கு கிழக்கைச் சேர்ந்த அரசியல் முகங்களான அனந்தி சசிதரன், யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், மட்டக்களப்பு நகர முதல்வர் சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மனித உரிமை செயற்பாட்டாளர் கணேஷ் ஆகியோர் தற்போது ஜெனிவாவில் தங்கியுள்ளனர்.
சிறிலங்காவுக்கான உரை
சிறிலங்கா அரசாங்கம் சார்பில், ஜெனிவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.