சுங்கத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் : செத்தல் மிளகாய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாய் அடங்கிய பல கொள்கலன்கள் சுங்கப் பிரிவின் பொறுப்பில் உள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த கொள்கலன்களுக்குரிய தரச்சான்றிதழ் அனுமதி கிடைக்காமையினால், அவற்றை விடுவிக்க முடியாமல் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செத்தல் மிளகாய்த் தொகுதிகளை விடுவிப்பதற்கு உணவுப் பரிசோதனை அதிகாரசபை, தாவர தனிமைப்படுத்தல் சேவை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களினதும் அனுமதி அத்தியாவசியம் என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலை
அத்துடன் அந்த அனுமதிகள் இன்றி சுங்க முறைமை ஊடாகப் பொருட்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது செத்தல் மிளகாய் அடங்கிய சுமார் 64 கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவற்றுள் 33 கொள்கலன்களுக்கு தரநிர்ணய நிறுவனத்தின் அனுமதி கிடைக்கப்பெறாத அதேவேளை, மேலும் சுமார் 30 கொள்கலன்கள் அனுமதி கிடைக்கும் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர, தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டு அழிப்பதற்கு உத்தரவிடப்பட்ட சில கொள்கலன்களும் அவற்றுள் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புறக்கோட்டை மொத்தச் சந்தை
இவ்வாறு தேங்கிக்கிடக்கும் கொள்கலன்களுக்குள் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய, 9 இலட்சம் கிலோவிற்கும் அதிகமான செத்தல் மிளகாய் காணப்படுவதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் குறிப்பிடுகின்றது.

இந்த நிலைமையின் மத்தியில், எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் செத்தல் மிளகாய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன் தற்போது புறக்கோட்டை மொத்தச் சந்தையில் ஒரு கிலோ செத்தல் மிளகாய் விலை 1,600 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |