ஜப்பானைத் தாக்கிய முதலாவது சுனாமி அலை
புதிய இணைப்பு
முதல் சுனாமி அலைகள் ஜப்பானின் இவாத்தே மாகாணத்தை அடைந்து வருவதாகவும், மியாகோ துறைமுகத்தில் 40 செ.மீ உயரம் கொண்ட ஒரு அலை பதிவாகியுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஹொக்கைடோ மற்றும் இவாத்தே மாகாணங்களின் பசுபிக் கடற்கரையை 3 மீட்டர் (10 அடி) வரையிலான சுனாமி அலைகள் அடையும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் முதல் சுனாமி அலைக்குப் பிறகு ஒரு பெரிய சுனாமி அலை தாக்கக்கூடும் என ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் செய்தியாளர் சந்திப்பில் எச்சரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் வடக்குப் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சன்ரிகு கடற்கரையிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள கடற்பரப்பில், 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் இன்று (20) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்
இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பாதிப்புகள் குறித்து மதிப்பிட்டு வரும் அதிகாரிகள், நிலமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் அவசர சேவைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

ஜப்பான் விடுத்துள்ள ஆலோசனையில், சுனாமி அலைகள் ஏற்கனவே கடலோரப் பகுதிகளை நெருங்கி வருகின்றன, இவை மீண்டும் மீண்டும் தாக்கக்கூடும். எனவே, மக்கள் தாமதமின்றி வெளியேறி, எச்சரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும்.
அலைகள் கணிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வரக்கூடும், மேலும் எதிர்பார்க்கப்பட்டதை விட உயரமாகவும் இருக்கலாம்.
கடலோரப் பகுதிகள் மற்றும் நீர் பெருக்கெடுத்து ஓடக்கூடிய ஆற்று முகத்துவாரங்களிலிருந்து மக்கள் விலகியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |