மோசமான காலநிலை : கட்டுநாயக்கவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சில விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய, 05 விமானங்களை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திசை மாற்றி அனுப்பியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமித்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிலையங்கள்
அத்துடன், 02 விமானங்கள் இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவானந்தபுரம் ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு திசை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டார், சாஜா, அபுதாபி, புதுடெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த விமானங்களே இவ்வாறு திசை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |