இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பாரியளவு ஹெரோயின் சென்னையில் பறிமுதல் : இருவர் கைது
இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள், கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினைப் பறிமுதல் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களைச் சென்னையில் கைது செய்துள்ளதாகவும் இந்திய நிதியமைச்சகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இந்தியாவில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய ஹெரோயின் கடத்தல் சம்பவங்களில் இதுவும் ஒன்று என்று அந்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தடுத்து நிறுத்தப்பட்ட முயற்சி
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), கடல் வழியாக இலங்கைக்கு 71.24 கிலோ ஹெரோயினை கடத்த முயன்ற முயற்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், DRI அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் சென்னையில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
போதைப்பொருள் பறிமுதல்
இதன் விளைவாக, கடத்தப்படவிருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பெருமளவிலான ஹெரோயின் கடத்தப்படவிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் சென்னையில் சந்தேகத்திற்குரிய வாகனத்தையும், அதற்குத் துணையாக வந்த இருசக்கர வாகனத்தையும் வழிமறித்துச் சோதனையிட்டனர்.
👉 DRI seizes over 71 kg heroin being smuggled to Sri Lanka; two drug traffickers arrested in Chennai 👉 Seizure is single largest in India during 2026 Read more ➡️ https://t.co/v1TJKGfR3j #DRIAtWork https://t.co/uMHCUaCIAU
— Ministry of Finance (@FinMinIndia) November 19, 2026
அந்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, 71.24 கிலோ எடையுள்ள, வெள்ளை கலந்த பழுப்பு நிறத்திலான பொடி அடங்கிய 69 பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், இந்த ஹெரோயின் தொகுப்பு சென்னையை இடைமாற்ற மையமாகப் பயன்படுத்தி, திருச்சிராப்பள்ளி (திருச்சி) வழியாக கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்தது தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |