மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம்! ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மரண தண்டனை
மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் ஈபிடிபியைச் சேர்ந்த சிலர் தேவதாஸ் சுரேஷ் குமார் என்பவரை வானில் கடத்தி சென்று கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேரில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபகாரனால் இன்று (19) இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி தேவதாஸ் சுரேஸ்குமார் என்பவர் ஈ.பி.டி.பியைச் சேர்ந்த குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டு அதற்கு மேல் வாழைமரத்தை நட்டனர்.
வழக்கு தாக்கல்
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவல்துறையினரால் மேற்குறித்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணையின் பின்னர் 2016ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்ததுடன் கடத்தலுக்கு உபயோகித்த வான் மீட்கப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
இதில் முதலாவது குற்றமாக மரணத்தை விளைவிப்பதன் பொது நோக்கமாக கொண்ட சட்டவிரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினர்களாக இருந்தமை தண்டணைச் சட்டக்கோவை 140 பிரிவின் கீழ் 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டாவது குற்றமாக பொது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு சட்டவிரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினர்களாக இருந்த ஆட்கொலை தண்டணைச் சட்டக்கோவை 296 பிரிவின் கீழ் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
வழக்கிலிருந்து விடுவிப்பு
மூன்றாவது குற்றமாக தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரின் மரணத்தை விளைவித்தன் மூலம் ஆட்கொலை தண்டணைச் சட்டக்கோவை 206 பிரிவின் கீழ் மரணதண்டனையும் என மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தும் 9ஆவது சந்தேக நபரை வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பளித்தார்.

இதனை தொடர்ந்து 8 பேரும் உடனடியாக நீதிமன்றில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |